இனிய சனி !


அன்று காலை விழித்ததும் நினைக்கவில்லை இன்று நான் என்னை புதிதாய் உணர்வேன் என்று. என்றும் போல விழித்த கண்கள் மூடிக்கொண்டன. 7 மணி என்ற போதும் எழலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருந்தது மனம்.

அரை தூக்கத்தில் இருந்த என்னை பக்கத்துக்கு அறையில் இருந்து எழுந்து வந்து எனது தோழி எழுப்பினாள். அவளது அலுவலகத்தில் இருந்து வாரா வாரம் பக்கத்துக்கு தெருவில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். திடீரென அவள் என்னிடம் "நீயும் வாயேன் சௌமி" என்று கூறினாள். அட, நல்ல யோசனை. வீணாய் பொழுதை கழிப்பதை காட்டிலும் இது ரொம்ப நல்ல விஷயம் அல்லவா? 

பட படவென எழுந்து கிளம்பி விட்டேன். ஒன்பதே முக்காலுக்கு தயாராக நிறுத்தத்தில் போய் நின்று விட்டோம். பக்கத்துக்கு KR bakery -இல்  ஒரு பப்ப்ஸ், ஒரு காபியோடு காலை உணவை முடித்து விட்டு அவர்களது organizer  காக காத்திருந்தோம். 

அவர் வந்ததும் ஒரு cab -இல் அனைவருமாக பள்ளியை அடைந்தோம். அறிமுகங்கள் முடித்து, பள்ளிக்குள் சென்றோம். எங்களுக்கு ஆறாம் வகுப்பு. அவர்களுக்கு மணியின் அளவைகளை சொல்லி தரும் வேலை. 

நாங்கள் நான்கு பேர். எனவே அவர்களை நான்கு குழுக்களாக பிரித்து பாடம் சொல்லி தரலானோம். 

பிள்ளைகள் இருவருக்குள் பேச்சு வார்த்தை இல்லையாம். ஒரே குழுவில் இருக்க முடியாது என தர்ணா போராட்டம். 

பாலமுருகன், லக்ஷ்மி, தமிழ்(??). ஒரு வழியாக எனது குழுவில் வந்து சேர்ந்தார்கள். என்ன வாய். 1 நிமிஷத்துக்கு எத்தனை நொடி என்று நான் கேட்டு முடிக்கவில்லை. அக்கா இதெல்லாம் படிச்சாச்சு. வேண்டாம். என்று ஒரே குறும்பு. 

பாலா தான் பட்டென்று சொல்வதை எல்லாம் பிடித்து கொண்டான். லக்ஷ்மிக்கு நிறைய ஆர்வம், நிறைய வாய். தமிழ்-ஓ வாய் திறக்க வேண்டுமா ஒரு   ௦   10 ரூபா  தாருங்கள் என்பவள்.

ஒரு பிள்ளையை பார்க்கையில் எனக்கு பாடகி சின்மயி கண் முன் தோன்றினாள். அந்த பிள்ளையோடு 3  பேர் இருந்தார்கள். அவர்களுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. :) :) 

அந்த வகுப்பில் சிறு பிள்ளைகளின் அத்தனை குணங்களையும் ஒரு சேர கண்டேன். 

அடுத்து, நானும் ஜெனி என்பவரும் 9 -ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆங்கிலம் சொல்லி தர வேண்டி அங்கு சென்றோம். 

கள்ளமில்லா புன்னகையோடு வரவேற்பு. "அக்க உங்க பேரு என்ன? "- எல்லார் வாயிலிருந்தும் விழுந்த முதல் கேள்வி. :)

பெனாசிர், கீதா,பரணி, மூக்குத்தி அணிந்திருந்த முத்தழகு. (எனக்கு சிறிது ஞாபக மறதி :( ).

அவர்களுக்கு ஆங்கிலம் படிக்க சொல்லி தர வேண்டும். சமச்சீர் கல்வியின் அறிமுக புத்தகம். பாதி வார்த்தை எனக்கும் புரியவில்லை. பாவம் அவர்கள். அவர்களிடம் ஆர்வம் இருந்தது. அனால் அதற்க்கு தீனி போட ஆள் தான் இல்லை. ஆங்கிலம் பேச வேண்டும் என்ற அவர்களது ஆர்வம் என்னை ஆச்சரிய படுத்தியது. 

அக்கா, beautiful - னா என்ன? காலைல சாப்பாடு, மத்தியான சாப்பாடு, இரவு சாப்பாடு என்ன சொல்லுவோம்? என்ன சாப்பிட்டனு எப்படி கேக்கணும் ? a , an , the எதுக்கு எங்க உபயோகபடுத்தனும்? 

பல பல கேள்விகள். பல பல ஆர்வங்கள். இது போல எத்தனை எத்தனை ஆர்வமுள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போயிருப்பார்கள்! நினைக்கவே  வலித்தது. கோவம் அளவில்லாமல் வந்தது. 

டிங்.. டிங்..டிங்..

உணவு இடைவேளை..

சிட்டுக்களாய் பறக்க ஆரம்பித்து இருந்தன அப்பொழுதே விரிய ஆரமித்திருந்த அந்த சிறு மொட்டுக்கள். 

வகுப்பறையை விட்டு கிளம்ப மனமில்லாமல் வெளியே காலடி எடுத்து வைத்திருக்கவில்லை. பட்டாம்பூச்சிகளாய் பல சிறுவர்கள் ஓடி வந்து கை குலுக்கி சொன்னார்கள் "அக்கா, ஹாப்பி தீபாவளி".

ஆம், இது எனக்கு இனிய தீபாவளி தான். வரும் போது வாக்கு கொடுத்திருக்கிறேன் அடுத்த முறையும் வருவேன் என்று. 

கருத்துகள்

கருத்துரையிடுக