மது என்ன செய்வாள்??


நானும் ரொம்ப நேரமாக அவங்க ரண்டு பேரையும் பார்த்துட்டுதான் இருக்கேன். சரி சரி அப்படி பாக்காதீங்க. இன்னொருத்தர் வீட்டுல நடக்கறத எட்டிப் பார்க்கிறது தப்புதான். ஆனா இவங்க கதை ரொம்ப இன்ட்ரஸ்டிங். அதான்.

அடுப்பில் எண்ணெய் காய்ந்திருந்தது.அவள் சற்று எக்கி மேல் அடுக்கில் இருந்த கடுகு டப்பாவை எடுத்து, நாலு கடுகை வாணலியில் போட்டாள். அது பட படவென சத்தம் எழுப்பியது.

அவன் படுக்கை அறையில் இருந்தபடி மடிக்கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். சாப்ட்வேரில் வேலையாம். வொர்க் லைஃப் பாலன்ஸ் இல்லாம வேல பார்ப்பான் போல.

தீடீரென தலையைப் பிடித்தபடி, படக்கென எழுந்தவன்,  சமையலறையை நோக்கி நடந்து செல்கிறான். பூனை போல பதுங்கியபடி மெதுவாய் அவளை நோக்கி நடக்கிறான்.

எனக்கு மனம் பதைக்கிறதே.இது வரைக்கும் அவங்களுக்குள்ள சண்டை எதுவும் இருக்கல தான்.

நான் சட்டென நினைவு திரும்ப, அவனைப் பார்க்கிறேன். அவன் அவள் இடுப்பைச் செல்லமாகக் கிள்ள, அவளோ அவன் கைகளுக்குள் பொய்க் கோபத்தோடு சுழன்று கொண்டுள்ளாள். சிரித்துக் கொண்டேன்.

"மது, தல வலியா இருக்குடீ. ஸ்ட்ராங்கா ஒரு காஃபி தாயேன்"
"கொண்டு வரேன்!  நீ  போ! போய் வேலைய கன்டினியூ பண்ணு"
அவள் அவன் முதுகில், இரண்டு கைகளையும் வைத்துத் தள்ளிக் கொண்டுபோய் படுக்கையறையில் தள்ளி விட்டு விட்டு, திரும்ப சமையலறைக்குள் நுழைந்தாள்.

காபி மணம் என்னையே தூக்குது போங்க. அந்தக் காபியை அவனுக்கு தந்துவிட்டு , அப்படியே போய் அவனைக் காயை வணக்கச் சொல்லலாம் என்று எண்ணியபடியே அவனிருந்த அறைக்குப் போனாள், காபி ட்ரேயோடு.
ஆமாம், அவர்களுக்குள் உடன்பாடு சமையல் வேலைகள் சம பங்களிப்போடுதான் என்று.

அடடா! அவன் அதற்குள் குட்டி நேப் எடுத்துக் கொண்டிருந்தான். அவள் ட்ரேவை டேபிள் மீது  வைத்துவிட்டு, அதன் மேலிருந்த காபியை, அல்ல அல்ல! அது காபியல்ல!  பளபளவென்றிருந்த கத்தி.

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அதற்குள் அவள், குப்புறப் படுத்திருந்த அவன் முதுகருகில் கத்தியைக் கொண்டு போயிருந்தாள்.
"சாப்பிட வரப் போறயா?? அந்த புக்க புடுங்கி கிழிச்சு எறியனுமா??"

வேற யாரும் இல்லீங்க. எங்க அம்மாதான். இந்த புத்தகத்த மூடி வெச்சுட்டு  நான் சாப்பிட போறேன். வந்து படிச்சுப் பார்ப்போம் மது என்ன செய்யப் போறான்னு.

கருத்துகள்