பேய் படமும் சாவும்


ஏதோ திகில் படம் பார்த்து முடித்த மாதிரி இருந்தது  கண் முழித்த போதே. கனவா நிஜமா என்று விளங்கவில்லை. என்ன கருமமோ, கல்லூரிக்கு நேரமாச்சே என்று பதறியடித்து, எப்பவும் போல, கடைசி 5 நிமிடத்தை  தெய்வமாகக் கும்பிட்டு முடித்து,  பேருந்தைப் பிடிக்க ஓடி கொண்டிருக்கிறேன்.

நான் தேஜா. நேற்று இரவு எனது தோழி  கொடுத்த திகில் படம் ஒன்றை இரவு ஒரு மணி வரை கண் முழித்து பார்த்துக் கொண்டிருந்தேன். உடனே  நான் பேய் படம் பாத்தாலும் பயப்படாத பொண்ணு என்றெல்லாம்  நினைத்துக் கொள்ள வேண்டாம்.பயத்த வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேயையும் கிண்டலடித்துக் கலாயித்துப் படம் பார்க்கும் ஜாதி நான்.

திடீரென்று உணருகிறேன். பேருந்து நிறுத்தத்திற்கு ஓடி கொண்டிருந்த நான் இப்போது எங்கே ஓடுகிறேன் என்றே தெரியவில்லை. ஒன்றும் புரியாமல், கால்களை நிறுத்த முயல்கிறேன். நிற்க மாட்டேன் என்று எதோ திசையில் ஓடிகொண்டே இருக்கின்றன என் கால்கள்.

கண்கள் சுற்றும் முற்றும் பார்க்கின்றன. இடம் என்னவென்று புலப்படுகிறதா என்று மூளையிடம் கேட்கின்றன. குழப்பம்.

அங்கே ஒரு தூண் கம்பி தெரிகிறது கண்களுக்கு. மூளை கைகளிடம் அதை பிடித்து உன் கால்களை நிறுத்து என்று ஐடியா தருகிறது. கைகள் மெல்ல காற்றில் பறந்து , தூணை நெருங்க காத்திருகின்றன. அதோ தூண். பிடி. ஆஹா, பிடித்து விட்டாயிற்று. மேலும் கீழுமாய் பெருமூச்சு விடுகிறேன்.   வேர்த்து விறு விறுத்த முகத்தை தோளில் சாய்த்து துடைத்த படி எந்த இடத்தில இருக்கிறேன்  என்று சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.

வெற்றிடம். தூரத்தில், வெகு தூரத்தில் ஒரு சுவர். அதில் ஏதோ என்னை வா வா என்று கூப்பிடுவது போல தெரிகிறதே. பாழாய் போன  கண்ணுக்கு அவ்வளவு தூரம் பார்க்கும் திராணி இல்லாமல், சுருக்கி நெருக்கி பார்க்க முயற்சித்தது. குனிந்து பார்க்கிறேன். எட்டி பார்க்கிறேன். சரியாகவே தெரியமாட்டேன் என்கிறதே. கொஞ்சம் முன்னாடி போய் தான் பார்ப்போமே. இரண்டடி முன்னால் போய் உற்று பார்க்கிறேன். அப்போது தான் உணர்கிறேன், என் கால்கள் ஓட்டத்தை நிறுத்தி  விட்டிருந்தன.

 மெல்ல மெல்ல சுவரை நோக்கி நடந்து போகிறேன். ஒவ்வொரு பத்து அடிக்கும் என் மன நிலை மாறி மாறி நடிக்கிறது.

முதலில் ஒரு மகிழ்ச்சியான, ரம்மியமான  மன நிலை. சுற்றிலும் மரங்கள், பூக்கள், கொடிகள். ஒரு மனோரஞ்சிதமான சூழல். கண்ணை மூடினால் காற்றில் புல்லாங்குழல் கலந்திருந்தது.

சற்று முன்னாடி போய் விட்டிருந்தேன். மனநல காப்பகத்தில் பித்து பிடித்து தன்னை அறியாமல் இழித்தும்,  இளித்தும், பலித்தும் திரியும் பேதையை போல உணர்கிறேன். சிரிக்கிறேன். அழுகிறேன். கால்கள் நிற்கவில்லை. சுற்றி ஓடி வந்து சுவரை நோக்கி போகின்றன.

இப்பொழுது ஒரு இனம் புரியாத சோகம் வந்து விட்டிருந்தது. கண்கள் பொல பொலவென்று கண்ணீரை சிந்திகொண்டிருகின்றன. ஏன், எதற்கு என்று யோசிக்க கூட இல்லை. கண்கள் கண்ணீர் குளமாய் மாறியிருக்க, சுவர் வந்தடைந்த செய்தி தெரியாமல், சுவர் மீது தலை மோதி கொண்டேன்.

அட, திடீரென்று எதுவும் தோன்றவில்லை. அழ தோன்றவில்லை. சிரிக்க தோன்றவில்லை. சலனமற்று போயிருந்தது. சுவரை அண்ணாந்து பார்க்கிறேன். திடீரென்று கண்ணை கூசும் ஒளி. அது கதவு திறக்க பட்டு வந்த ஒளி .போலும். 'ஒளி நல்லது. புனிதமானது. ஓடி விடுவோம் இக்கதவு வழியே', என்ற நினைப்போடு இரண்டடி எடுத்து வைக்கவில்லை. கதவு  சாத்திக் கொண்டது. இருள் திரும்பவும் கவ்வி கொண்டது.

இம்முறை இருளோடு ஒரு உருவமும் வந்தது. எனது இதய துடிப்பை தவிர வேறு எதுவும் என் காதில் விழவில்லை. யார் அது என்று திகிலோடு என் கண்கள் அந்த உருவத்தை பார்க்கின்றன. அது.. அது.. அது நானே தான். ஒன்றும் விளங்காமல் நான் திரு திருவென விழிக்கிறேன்.

"சாதல்"

இது தான் என் எதிரில் நிற்கும் நான் கூறினேன். அப்படியானால் நான் சாக போகிறேனா ?! பதற்றம்.

"ஆமாகவும் இருக்கலாம்"

நான் நினைத்ததற்கு பதில் கூறியது எதிரில் நிற்கும் நான். பயம். எனக்கு செத்து போவது என்றால் பயம். நான் சாக வேண்டாம். வகுப்பறைக்கே போக வேண்டும். கடவுளே!!!

எதிரில் நிற்கும் நான் திடீரென முன்னாடி வந்து எனது கையை பிடித்தது. பந்தை  எறிவது போல நாலு சுற்று சுற்றி.. சுற்றியது தான் தெரிந்தது. தூக்கி ஏறிய பட்டேன் என்று நினைக்கிறன்.

கண் விழித்து, தட்டி தடவி எழுந்து அண்ணாந்து பார்கிறேன். அங்கே என்னைபோன்ற நான் தலை கீழாய் நின்று கொண்டிருக்கிறேன்.

"உலகமாற்றுதல்", ஒற்றை சொல்லை சொல்லிவிட்டு, அந்த நான், நிற்க முடியாமல் நான் ஓடி வந்ததை போல, ஓடி போய் விட்டிருந்தது.

என்ன?!! எனது கால்களும் வேகமேடுகின்றனவே. விடு விடு வென வேக நடையில் ஆரமித்து, நாய் துரத்தினால் ஓடும் வேகத்தை அடைந்திருந்தேன். எங்கே போய் நிற்ப்பேன்? தெரியவில்லை.

கால்கள் நின்றன. சுற்றும் முற்றும் பார்த்தேன். உலகம் மாறியிருந்தது.

கருத்துகள்